Showing posts with label Chidambaram Gothsu. Show all posts
Showing posts with label Chidambaram Gothsu. Show all posts

02 April 2018

சம்பா சாதம் - சிதம்பரம் கொத்ஸு

சம்பா சாதம் - கொத்ஸு.



சிதம்பரம் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்தரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 100 - 150 கிலோ அரிசி போட்டு சம்பா சாதம் தினமும் செய்கிறார்கள்.

நைவேத்யம் ஆன பிறகு, இந்த சாதத்தை கோவிலிலுள்ள எல்லா தீக்ஷிதர்களுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஸ்வாமி பிரசாதம் என்பதை தவிர, வழக்கமாகவே சம்பா சாதமும், கொத்ஸுவும் மிக மிக ருசியாக இருக்கிறது.

போன வாரம் 19 ஜூன் 2013 அன்று நான் சிதம்பரம் கோயிலில் இதை சாப்பிட்டேன். செய்முறையை தீக்ஷிதர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொண்டேன். இதோ செய்முறை:

சம்பா சாதம் (மிளகு சாதம்) :


சம்பா சாதம்

தேவையானவை: 

1 டேபிள்ஸ்பூன்   மிளகு
1/2 டேபிள் ஸ்பூன்  ஜீரகம்
2 டேபிள்ஸ்பூன்     நெய்
200 கிராம் அரிசி
10 முந்திரி பருப்பு உடைத்தது, நெய்யில் வறுத்தது.
உப்பு

செய்முறை:

அரிசியை நன்கு அலம்பி, குக்கரில் தண்ணீர் ஊற்றி, அரிசியை போட்டு, சாதம் சமைத்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.
மிளகு, ஜீரகத்தை வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 
சாதத்தில் நெய் விட்டு, மிளகு, ஜீரகம் பொடியையும், முந்திரிப் பருப்பையும் போட்டு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
கொத்ஸுவுடன் சேர்த்து சாப்பிடவும்.


சம்பா சாதம் + கொத்ஸு



கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் --- 250 கிராம்.
புளி --- ஒரு எலுமிச்சை அளவு.
மஞ்சள் பொடி -- ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை -- கொஞ்சம்
கொத்ஸு பொடி --- 5 டீஸ்பூன் (செய்முறை கீழே உள்ளது)
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு --- 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) --- 1/2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு.
 

கொத்ஸுப் பொடி:

கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்.

கொத்தமல்லி விதை --- 3 டேபிள்ஸ்பூன்
ஜீரகம் -- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  -- 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் - கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
சிகப்பு வர மிளகாய் --- 5

ஒரு வாணலியில் மேலே எழுதியவைகளை ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் விட வேண்டாம்.

கொத்ஸு செய்முறை:


கத்தரிக்காய் வதங்குகிறது.

ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காய் துண்டங்களை (நீரை இறுத்து விட்டு) போடவும். கறிவேப்பிலை போடவும்.

கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.

இதற்கிடையே, ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். (concentrated).
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, உறைப்பு, புளிப்பு எது குறைகிறதோ, அந்த சுவையை கூட்டவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன், அடுப்பை அணைத்து விடலாம்.

கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை கெடாது.


கத்தரிக்காய் கொத்ஸு.

ராஜப்பா
22-06-2013



20 February 2018

சிதம்பரம் கொத்ஸு - 2

சிதம்பரம் கொத்ஸுவைப் பற்றி ஏற்கனவே (22-06-2013) எழுதி இருந்தேன். அதன் இன்னொரு செய்முறை.
[ வரகூர் நாராயணனுக்கு நன்றிகள் ]

சிதம்பரம் கொத்சு …

சம்பா சாதமும் கத்தரிக்காய் கொத்சும் சிவனையே சொக்க வைக்கும் நைவேத்தியம். பாரம்பரியமான இந்த கொத்சு தீட்சிதர்களால் செய்யப்படுவது போலவே, சிதம்பரத்தில் சில ஹோட்டல்களிலும் செய்யப்படுகிறது. இட்லிக்கு கொத்சுதான் துணை. வேறு சட்னி சாம்பாரா ? அதற்கெல்லாம் இங்கே வேலையே இல்லை. பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் கொத்சு கிடையாது…. எக்ஸ்ட்ரா சார்ஜ் சில இடங்களில்.


சிதம்பரம் செல்லும் முன்பே கொத்ஸின் அருமை பெருமைகளை முழுக்க அறிந்திருந்ததால், அங்குள்ள பல ஹோட்டல்களில் சுவைத்துப் பார்த்தோம். ‘பெஸ்ட்’ என்று நமது சுவை மொட்டுகள் சான்றிதழ் அளித்தது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் கொத்சுவுக்கே. புதுச்சேரி முதல்வரும் பல அமைச்சர்களும் இங்கு வாடிக்கையாளர்களாம். 46 ஆண்டு பாரம்பரிய ஹோட்டல். பிச்சாவரம் படப்பிடிப்புக்கு வந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு இங்கிருந்து பார்சல் அனுப்புவார்களாம். சிதம்பரம் நாட்டியாஞ்சலி கலைஞர்களின் வருகை இங்கு கொத்சு சாப்பிடாமல் நிறைவு அடையாதாம்!

மாலை 4.30 மணிக்குத் தயாராகும் கொத்சு அடுத்த இரண்டே மணி நேரங்களில் தீர்ந்து விடுகிறது. நல்ல கெட்டியான கொத்சு. சூடான இட்லிக்கு அப்படி ஒரு கச்சிதமான துணை. கோயிலில் சாப்பிட்ட சம்பா சாதம் + கொத்சுவுக்கு ஈடாக, இங்கே பொங்கலுக்கும் கொத்சு. டயட்டாவது ஒன்றாவது என்று எல்லோரையும் சுண்டி இழுக்கிறது சுவை.

எப்படி இப்படி ஒரு கொத்சு என்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் ஹோட்டலின் உரிமையாளர் சுப்ரமணிய பட், மேலாளர் நவீன் குமார் ஆகியோரைக் கேட்ட போது, “சுவைக்காக நாங்கள் எந்த காம்ப்ரமைசும் செய்வதில்லை. கோயிலில் செய்யப்படும் கொத்சுவில் வெங்காயம் இல்லை. இங்கு வெங்காயம் உள்ளது மட்டுமே வித்தியாசம். சிறிது வெல்லம் சேர்க்கிறோம். கத்தரிக்காய் பிஞ்சாக இருக்க வேண்டும்… அவ்வளவுதான்… இதற்கு மேல் சொல்ல முடியாது… ஏனெனில் இதுவும் சிதம்பர ரகசியமே” என்று வழியனுப்பி வைத்துவிட்டனர் நம்மை. கொத்ஸின் மகத்துவமே அந்த சீக்ரட் பொடிதான் என்பது பளிச்சென புரிந்தது நமக்கு. அந்த ஃபார்முலாவை நாம்தானே கண்டுபிடிக்க வேண்டும். இதோ களமிறங்கி விட்டோம்.

–
கொத்சு புராணம் தொடரும்

 கொத்சு பொடி

என்னென்ன தேவை ?
கொத்தமல்லி (தனியா) – கால் கப்

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – கால் டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது ?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.

 சம்பா சாதம்

என்னென்ன தேவை ?
உதிராக வடித்த பச்சரிசி சாதம் – ஒரு கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
ஜீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
மிளகாய் வற்றல் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
பெருங்காய பொடி – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது ?
ஒரு துளி நெய் விட்டு, மிளகு, ஜீரகத்தை மணம் வரும் வரை வறுத்து , மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.


சாதத்தை உதிர்த்து, சிறிது நெய் விட்டு பிசறி வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகாய் வற்றல், கறி வேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும்.

பொடித்த மிளகு, ஜீரகப் பொடியையும், உப்பையும் போட்டு நன்கு கலந்து விடவும்.

விரும்பினால் முந்திரிக்குப் பதில் சிறிது வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

ராஜப்பா
27-12-2013
6:15 மாலை

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...