தமிழ் வருஷப் பிறப்பு விசேஷ சமையல்
தமிழ்ப் வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, கோசுமல்லி,ஆமவடை, பாயஸம் ஆகியவைகளை செய்து சாப்பிடுவது வழக்கம். சில வீடுகளில் போளியும் பண்ணுவார்கள். எங்கள் வீட்டில் பால்போளி செய்வோம்.
செய்முறை:
வேப்பம்பூ பச்சடி
இந்த பச்சடியை ஒரு முறை சாப்பிட்டீர்களானால் பின்பு விடவே மாட்டீர்கள்; ருசி மட்டுமல்ல, நிறைய மருத்துவ குணங்களும் அடங்கியது.
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் (சிவப்பு) - 6
கடுகு, தாளிக்க
கறிவேப்பிலை, பெருங்காயம் - கொஞ்சம்
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - சிறிது
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வேப்பம்பூவை கருகாமல் சிவப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, க்டுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றைத் தாளிக்கவும்.
புளியைக் கரைத்து, ஒரு டம்ளருக்கு அதிகமாக விட்டு, உப்பு போட்டு, நன்கு கொதிக்க விடவும்; கொதிக்கும் போது வெல்லத்தைப் போடவும்.
வெல்லம் கரைந்தவுடன், அரிசி மாவைக் கரைத்து விட்டு, சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேப்பம்பூ பொடியைப் போட்டு கலக்கவும்.
மாங்காய் பச்சடி
மாங்காய் - 1 பெரிது
வெல்லம், பொடித்தது - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் பொடி, உப்பு
மாங்காயை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளை போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு, காய் மூழ்கும்வரை தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
காய் நன்றாக வெந்தவுடன், கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வெல்லப் பொடியை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து காயுடன் சேர்ந்த பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
கோசுமல்லி
கோசுமல்லி சத்து மிகுந்த ஒரு உணவு. பயத்தம்பருப்பும், காய்களும் கலந்த ஒரு சிறந்த ஸாலட்.
2 கப் பயத்தம் (பாசி) பருப்பை நன்கு அலம்பி, தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு மாங்காயை சீவி பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும்
3 காரட்டை (CARROT) தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
1 வெள்ளரிக்காயை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
1/2 மூடி தேங்காயை துருவிக் கொள்ளவும்.
தண்ணீரை இறுத்து விட்டு ஊறிய பருப்பில் மேற்சொன்ன காய் துருவல்களை சேர்க்கவும்.
ஒரு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி இதில் போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பருப்பில் போடவும். உப்பு போடவும்.
நன்றாக கலக்கவும். கோசுமல்லி ரெடி.
பால் போளி
வருஷப் பிறப்பன்று போளி செய்வது எங்கள் வீட்டில் வழக்கம் - அதுவும் பால் போளி ! எல்லாரும் மிக விரும்பி சாப்பிடும் போளி.
தேவையானவை
மைதா, 200 கிராம்
சிரோடி ரவை, 50 கிராம். (சிரோடி ரவை என்பது பம்பாய் ரவையை விட கொஞ்சம் மெலிதாக இருக்கும்; பங்களூரில் கிடைக்கும்)
நெய், 4 டேபிள்ஸ்பூன்
பால், 2 லிட்டர்
சர்க்கரை, 2 டம்ளர்
பச்சைக் கல்பூரம், குங்குமப்பூ - சிட்டிகை
முந்திரி, பிஸ்தா பருப்பு, தேவையானால்
செய்முறை
மைதா, ரவா, நெய் மூன்றையும் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய வட்டங்களாக பூரி போன்று இட வேண்டும்.
பாலை நன்றாகக் கொதிக்க விட்டு நன்றாகச் சுண்டியவுடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் மிதமான தீயில் கொதித்துக் கொண்டே இருக்க விடவும்.
அடுப்பில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, மிதமான தீயில், மெல்லிய வட்டங்களாக இட்ட பூரிகளை பொரித்து, சூட்டுடனேயே பாலில் முக்கி, ஒரு தாம்பாளத்தில் போட்டு, ஒவ்வொன்றாக மடித்து வைத்து விடவும்.
கடைசியில், பாலை போளிகளின் மேலேயே ஊற்றி வைத்தால் நன்றாக ஊறிவிடும்.
முந்திரி, பாதாம் பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
ஆமவடை, பாயஸம்
வடை, பாயஸம் செய்வது எல்லாருக்கும் தெரிந்ததால், செய்முறை இங்கு குறிப்பிட இல்லை.
எல்லாருக்கும் வருஷப் பிறப்பு வாழ்த்துக்கள்.
ராஜப்பா
10-04-2010
10 மணி
Subscribe to:
Post Comments (Atom)
DAHI BHINDI
DAHI BHINDI Ingredients ...
-
நம் வீடுகளில் (13ஆம் நாள் சுபஸ்யம்) க்ரேக்கியத்தன்றோ அல்லது சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு மறுநாள் செய்யும் ஸ்வாமி சமாராதனையன்று செய்யும் சமையலை...
-
நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம். 5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண...
-
திருவாதிரை கூட்டு செய்ய பல காய்கறிகள் தேவைப்படுகின்றன - எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் போதும்; ஆனால் கடையில் கொஞ்சம் கேட்டால் கொடுப்பதில்லை ! என்ன ...
No comments:
Post a Comment