06 April 2018

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்.

1. தேவையான பொருட்கள்.

அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

2. காய்கறிகள்:

சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கலந்த காய்கள் - 2 முதல் 3 கப் வரை (நடுத்தர அளவிற்கு வெட்டியது)

முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, குடை மிளகாய், பச்சை பட்டாணி  ஆகியவற்றைச் சேர்க்கலாம்.



3. வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்ம் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

4.தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 4 அல்லது 5 (விருப்பப்பட்டால்)

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி, அத்துடன் 3 அல்லது 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயம், கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்தப் பொருட்கள் சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள காய்களைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். பின் தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும்.

மூடி போட்டு காய்கள் வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையானால் மேலும் நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்கும் பொழுது, அடுப்பைத் தணித்து விட்டு, சாதம்/பருப்பு கலவையை, நன்றாக மசித்து விட்டு, இந்த கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும். அத்துடன் பொடித்து வைத்துள்ளப் பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

சாம்பார் சாதம் ரெடி.

ராஜப்பா
01-07-2012
பகல் 12.00 மணி

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...