15 November 2017

திருவாதிரை களி, கூட்டு

பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை (சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது நடந்தது ஒரு மார்கழி மாஸம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.

இந்த வருஷம் [2012] திருவாதிரை பண்டிகை ஜனவரி 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. களியும் கூட்டும் செய்து நடராஜனுக்கு நிவேதனம் செய்து, கோயிலுக்குப் போய் நடராஜனை சேவித்து, அவனது அருளாசிகளைப் பெறுவோம்.

முதலில் திருவாதிரை களி செய்முறை பார்ப்போம்:

பச்சரிசி --- 250 கிராம் 
பாசிப்பருப்பு --- 100 கி (பயத்தம்பருப்பு)

முந்திரி --- 10
நெய் ---- 3 டீஸ்பூன்
ஏலக்காய் --- 3
தேங்காய் (துருவியது) ---- 1 மூடி [நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம்]
வெல்லம் ---- 350 கிராம்

அரிசியை நன்கு அலம்பி, களைந்து உலர்த்திக் கொள்ளவும்.

அரிசியையும் பயத்தம்பருப்பையும் தனித்தனியே சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, இரண்டரை தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதி வரும்போது உடைத்த அரிசி-பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக தூவினாற்போல போடவும் - கட்டி தட்டி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

முக்கால் பதம் வெந்ததும் சிறிது நெய், தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். [தேங்காய் வேண்டாதவர்கள் நெய் மட்டும் சேர்க்கவும்]

மேலும் 10 நிமிஷங்கள் இளம் சூட்டில் (SIMMER) வைத்து கிண்டி, நன்கு வெந்தவுடன் இறக்கிவிடவும்.

மீதி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, ஏலக்காயை பொடித்து களியில் போட்டு கிளறி விடவும்.

திருவாதிரைக் களி தயார் .. ஏழுகறி கூட்டுடன் சேர்த்து சாப்பிடவும்.

அடுத்து, ஏழு-கறி கூட்டு ::

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு - ஒவ்வொன்றும் 100 கிராம். [தோலுரித்துக் கொள்ளவும்]

வாழைக்காய் - ஒரு பாதி; பூசணி, பரங்கிக்காய், ஒவ்வொன்றும் ஒரு சிறு பத்தை

அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்.,

மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை, கொத்துக்கடலை (முதல் நாளே ஊறவைத்துக் கொள்ளவும்) (ஒவ்வொன்றும் 1/2 கைப்பிடியளவு)

கறிவேப்பிலை

துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்
புளி ---- எலுமிச்சம் பழ அளவு.
சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்
உப்பு,

அரைத்துக் கொள்ள --

தனியா 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -- 8 - 10
தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.

சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.

காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.

உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.

5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.

எழுகறி கூட்டு தயார்.

திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்.

ராஜப்பா
மாலை 5-45
6-1-2012

1 comment:

  1. அருமை. சத்தாண உணவு.குறிப்பாக இளம் பெண்களுக்கு.

    ReplyDelete

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...